Sunday, January 11, 2009

506. சத்யம் மோசடியால் ஆந்திர அரசியல்வாதிகளுக்கு சிக்கல்!

சத்யம் மோசடியால் ஆந்திர அரசியல்வாதிகளுக்கு சிக்கல்! :

வெளிச்சத்துக்கு வருகிறது அடுத்தடுத்து மெகா ஊழல்கள்

ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் மோசடியால், ஆந்திர அரசியல்வாதிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்துள்ள சில மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கியுள்ளன. நாடு முழுவதும், தற்போது சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தைப் பற்றித் தான் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ 8,000 கோடி ரூபாய் அளவுக்கு மெகா மோசடி செய்ததும், அதை அவரே ஒப்புக் கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு உள்ள அரசியல் தொடர்புகள் குறித்தும் பலமான பேச்சு எழுந்துள்ளது. இந்த பிரச்னையில் ஆந்திர அரசியல்வாதிகளுக்கு தலைவலி ஆரம்பமாகியுள்ளது.

ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கும் போது, சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். தகவல் தொழில் நுட்பத் துறையில் ராமலிங்க ராஜூ தான் அதிக புகழ் பெற்றவர், சாதனையாளர் என, ஆந்திரா முழுவதும் அப்போது பெரும் பிரசாரமே செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் ஆந்திராவில் கொடி கட்டிப் பறந்தது. கடந்த 2004ல், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. சந்திரபாபுவுக்கு ஆதரவான நிறுவனம் என்பதால், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கடி தரப்படும் என எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால், ராஜசேகர ரெட்டியுடனும் நெருங்கினார் ராமலிங்க ராஜூ. சத்யம் குழுமத்தைச் சேர்ந்த மைடாஸ் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு மாநில அரசு முக்கியத்துவம் தரத் துவங்கியது. மாநில அரசின் மிகப் பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கான பெரும்பாலான ஒப்பந்தங்கள், மைடாஸ் நிறுவனத்துக்கே தரப்பட்டன.

பொதுவாக, வளர்ச்சிப் பணிகள் நடப்பதற்கு லஞ்சமே மிகப் பெரிய தடையாக இருக்கும். ஆனால், ஆந்திராவைப் பொறுத்தவரை, லஞ்சத்தை மறைப்பதற்காக வளர்ச்சிப் பணிகள் நடந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான "ஜலாயங்னம்' என்ற நீர்ப்பாசனத் திட்டம், 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான மசூலிப்பட்டினம் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்கள் மைடாஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டன. இதில், துறைமுகத்துக்காக மாற்று இடத்தைக் கையகப்படுத்துவதற்காக, மைடாஸ் நிறுவனத்துக்கு மாநில அரசு சார்பில் ரொக்கமாக 300 கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்கப்பட்டது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதேபோல், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்திலும் சர்ச்சை எழுந்தது. அரசியல் ஆதாயத்துக்காக இந்த ஒப்பந்தம் மைடாஸ் நிறுவனத்துக்கு தரப்பட்டதாக சந்தேகம் எழுப்பப் பட்டது. இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் திட்ட தலைவர் ஸ்ரீதரன் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். மேலும், ஒரு முக்கியமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மகனுக்கு 200 ஏக்கர் நிலத்தை தருவதாகவும் மைடாஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இதுகுறித்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல், சத்யம் நிறுவனத்தால் துவங்கப்பட்ட எமர்ஜென்சி ஆம்புலன்ஸ் திட்டம் தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது போன்ற பல மெகா ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரத் துவங்கியுள்ளதால், சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டி போன்ற ஆந்திர அரசியல்வாதிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: தினமலர்

எ.அ.பாலா டெயில் பீஸ்:

இப்படி அரசியல்வாதிகள் பற்றி இவ்வளவு ஊழல் தொடர்பான புகார்கள் வந்திருப்பதைப் பார்த்தால், அரசு தலையீட்டால் (அரசு சத்யம் போர்டுக்கு தானே ஆட்களை நியமிக்க இருக்கிறது!) சத்யம் மொத்தமா உருப்படாம போய் விடும் போலத் தெரிகிறது. .டி. துறையில் தான் அரசியல் தலையீடும் அரசியல்வாதிகளின் லஞ்ச லாவண்யமும் அவ்வளவு இல்லாமல் இருந்தது. இனிமேல், அது காலின்னு நினைக்கிறேன். சத்யம் பிரச்சினையை சாக்காக காட்டி, .டி துறை கம்பெனிகள் அலைக்கழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, உலகெங்கும் பொருளாதார நெருக்கடி வேறு. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் "கோவிந்தா கோவிந்தா" தான் !!!

பாவம் சத்யம் கம்பெனியில் வேலை பார்க்கும் மக்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. மற்ற ஐ.டி கம்பெனிகள் (புனிதப்பசு போல் இன்ஃபோசிஸ் முன்னாள் சேர்மன் நாராயணமூர்த்தி தன் கம்பெனி சத்யம் ஆட்களை வேலைக்கு எடுக்காது என்று திருவாய் மலர்ந்துள்ளார்!) அவர்களை இப்போதிருக்கும் சூழலில் வேலைக்கு எடுக்கத் தயங்குவார்கள். சத்யம் கம்பெனிக்கு வேண்டிய நிவாரணத் தொகையை சிலபல வங்கிகள் வாயிலாக வழங்குமாறு அரசு செய்து விட்டு, திறமையான நேர்மையான ஆட்கள் சத்யமை நடத்திச் செல்ல வழிவகை செய்யப்பட்டாலொழிய, சத்யம் உருப்பட (லெம்மன் பிரதர்ஸ் கதி தான் ஏற்படும்!) சான்ஸே கிடையாது :-(

6 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test ...

said...

Murthy said that he wont POACH Satyamites which wud further damaging the Satyam.

It was a kind favor, not an insult or self-appraisal.

said...

i agree. the employees shud take the projects and move over to other companies or make new one.

இலவசக்கொத்தனார் said...

ஆண்டாள் பதிவுன்னு வந்தேன். இப்படி ஆப்பு அடிச்சுட்டீங்களே! :)

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் பாலா. நீங்கள் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் நானும் நினைத்தேன். பாதிக்கப்பட்டவன் என்பதாலும் இது போன்ற விஷயங்களை எழுதுவதில்லை என்பதாலும் ஏதும் எழுதவில்லை. நன்றி.

கிருஷ்ண மூர்த்தி S said...

"சத்யம் மோசடியால் ஆந்திர அரசியல்வாதிகளுக்கு சிக்கல்!"

"வெளிச்சத்துக்கு வருகிறது அடுத்தடுத்து மெகா ஊழல்கள்!"

கெட்டதிலும் ஒரு நல்லது என்று இதைத்தான் சொல்கிறார்களோ?!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails